Friday, February 27, 2009

ஆக்ஸ்ஃபோர்டு அறியா ஆங்கிலம்

சம்பவம் தொடங்கியது இவ்வாறுதான்: "Who name?". நான் பார்ஜில் ஆய்வு செய்யும் வெல்டிங்கில் ஏதாவது பிசுறுகள் இருப்பின் அதை களைவதற்கு உதவியாளராக ஒரு இந்தோனேசியர் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தார். அவரை எல்லோரும் "பன்ஜாங்" என்று அழைக்கவும் நானும் அவ்வாறே அவரை அழைத்தேன். ஆனால் பின்பு கூர்ந்து கவனிக்கும்போது அவரும் மற்றவர்களை பன்ஜாங் என்றே அழைத்தார். இறுதியில் அவரிடமே அவருடைய பெயரைக்கேட்டபோது, "சிப்ரி" என்று கூறினார். பன்ஜாங் என்றால் சீன மொழியில் நெட்டை ஆசாமி என்று பொருளாம். சிப்ரி என்பது இந்தோனேசியாவில் இஸ்லாமிய பெயர் என்றும், என்னுடைய பெயரை தெரிந்துகொள்ளும் நோக்கில் கேட்கப்பட்ட கேள்விதான் "Who name?". அவர் என்ன கேட்கிறார் என்று தெரிந்துகொள்ள சிறிது நேரம் எடுத்தாலும் இறுதியில் புரிந்துகொண்டேன்.

இரவு போஜனத்தை இங்குள்ள இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே மேசையில் அமர்ந்துண்பது வழக்கம். அன்று இரவு உணவு வேளையின்போது பகலில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நண்பர்களுடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டேன். அப்போது இங்கு ஒரு நவீன ஆங்கில இலக்கியமுறை கையாளப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்.

பிரான்சிஸ் வல்லியூரைச் சேர்ந்த நண்பர். சென்ற மாதம் பார்ஜில் எலெக்ட்ரீஸியன் பணிக்கு வந்து சேர்ந்தார். இவருடைய இத்தாலிய ஃபோர்மேன் இவரிடம் ஒரு தொலைபேசியைக் கொடுத்து, அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்குமாறு கூறுகிறார். இதில் அந்த ஃபோர்மேன் பிரான்சிஸிடம் மூன்று விஷயங்களை புரியவைக்க வேண்டும். ஒன்று, அத்தொலைபேசியை பொது ஸ்டோரில் அல்லாமல் எலெக்ட்ரிகல் ஸ்டோரில் வைக்க வேண்டும். இரண்டு, எலெக்ட்ரிகல் ஸ்டோரில் அத்தொலைபேசியை வைக்கவேண்டிய குறிப்பிட்ட இடம். மூன்று, அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள அடுக்குகளில் எந்த அடுக்கில் வைக்கவேண்டும் என்பது . பிரான்சிஸிடம் அவர் முதலாவதாகக் கூறியது "No big store, ok". பிரான்சிஸிற்க்கு இதை எலெக்ட்ரிகல் ஸ்டோரில் வைக்கவேண்டும் என்று புரிந்துவிட்டது. பின்பு ஃபோர்மேன் கூறியது "Go electrical store, no right, no right, right". ஒருவாறாக இதுவும் நண்பருக்கு புரிந்துவிட்டது. அதாவது எலெக்ட்ரிகல் ஸ்டோருக்குச் செல்ல வேண்டும், உள்ளே சென்றவுடன் மூன்றாவது வலதில் திரும்பவேண்டும். இறுதியாக ஃபோர்மேன் கூறியதுதான் முற்றிலும் இலக்கண வரம்பிற்கு அப்பாற்பட்டது . " after up more more telephone keep". நண்பருக்கு ஆங்கிலம் தெரியாதபட்சத்தில், ஆங்கிலம் தெரிந்த ஒருவரிடம் இந்த வாக்கியத்தின் விளக்கத்தை கேட்டறியலாம். இப்போது இந்த ஆங்கில வாக்கியத்தை மீண்டும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துதரத்தக்கவல்லவரை இந்த நொடியில் எங்கே பிடிப்பது. நண்பர் விழிப்பதை பார்த்த ஃபோர்மேன், அவரே அந்த வாக்கியத்தின் பொருளைப் புரியவைக்கலானார். ஒருவழியாக ஃபோர்மேன் கூறவந்ததை பிரான்சிஸ் இறுதியில் புரிந்துகொண்டார். அதாவது, எலெக்ட்ரிகல் ஸ்டோரின் குறிப்பிட்ட இடத்தில், மேல் அடுக்கில் நிறைய தொலைபேசிகள் இருக்கும், அதோடு இதையும் வைக்க வேண்டும்.

ஸ்டோரில் நடக்கும் மற்ற கதைகளைப் பார்ப்போம். பொது ஸ்டோரில் முதல் வலதில் திரும்பி மீண்டும் மூன்றாவது இடதில் திரும்பி நேராக செல்வதற்கு கொடுக்கும் வழிமுறை. " Go right. no left, no left, left. After gogo gogogooooooo gogo" . உலோகத் துண்டுகளை குறிப்பிடட்ட வடிவில் வெட்டிய பிறகு அதனை இறுதி வடிவம் கொடுப்பதற்கு ஃபைல் (file) செய்வது வழக்கம். நகவெட்டியால் நகத்தை வெட்டிய பிறகு அதன் பின் பகுதியை வைத்து நகத்தை வடிவாக்குவதைப்போல. தனக்கு சரியாக ஃபைல் செய்யத்தெரியவில்லை என்று ஸ்டோர் கீப்பர் ஒரு இந்தோநேசியரிடம் கூறவும் அதை ஃபைல் செய்வது எப்படி என்று இந்தோனேசியர் இவருக்கு ஆங்கிலத்தில் புரியவைக்கிறார் (வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி இல்லாமல் அதிவேகமாக வாசிக்கவும்) No..........FileFileFileFileFileFile (அடுத்து வரும் வாக்கியத்தை வார்த்தைக்கு வார்த்தை குறைந்த பட்சம் இரண்டு நொடி இடைவெளி விட்டு வாசிக்கவும்) File (ஃபைஈஈஈஈஈல்) ....... File...... File....... File....... ஆங்கிலம் தான் எத்தனை சுலபமானது.

கடலில் நீருக்கு அடியில் ஏதாவது பனி இருப்பின் பொது ஒலிபெருக்கியில் Divers ready என்று அழைப்பார்கள். இதைக்கேட்ட ஒருவர் நண்பர் அருணிடம் "Have swimming?" என்று கேட்கவும், அருணுக்கு விழி பிதுங்கிவிட்டது. அதாவது உனக்கு நீச்சல் தெரியுமா என்று வினவியிருக்கிறார்.

பிரான்ஸிசும் அவருடைய சக எலெக்ட்ரீஸியனும் ஒரு ஒயரிங் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது பிரான்ஸிசிடம் அந்த இரண்டாமவர் திடீரென்று "செக் ஸுப்லே" என்று கூறவும் நண்பர் பிரான்ஸிசும் எதையோ தேடச் சொல்கிறார் என்று புரிந்தவராக காலுக்கு அடியில் துளாவத் துவங்கியிருக்கிறார். இதைக்கண்ட அந்த இரண்டாமவர் "Have tester?" என்று கேட்கவுமே, நண்பருக்குப் புரிந்தது அவர் கூற முற்ப்பட்டது "Check supply". பிரான்சிஸிடம் ஒரு வெல்டிங் இயந்திரம் பழுதாகிவிட்டதாகக் கூறி அதை சரிப்படுத்த வருமாறு அழைப்பு வருகிறது. அதைக்கேட்ட அவருடைய ஃபோர்மேன் பிரான்சிஸிடம் கூறியது "No go. You no, I no." இருவருக்குமே அதனைப்பற்றிய தொழில்நுட்பம் தெரியாது என்று கூற முயற்சித்திருக்கிறார்.

நானும் ஒன்றும் சளைத்தவனல்ல. என்னுடைய மூன்றாம் வகுப்பில் ஒரு பேனா காணாமல் போய்விட்டதாகவும் அதை யாரேனும் பார்த்தீர்களா என்று வகுப்பாசிரியை பதர்நிசா மாணவர்களிடம் கேட்க நானும் எழுந்து நின்று கூறியது "I no miss". "My name is Jamsheed Salahudeen" என்ற வாக்கியத்திற்கு பிறகு இதுதான் நான் பேசிய முதல் ஆங்கில வாக்கியம். தொலைந்த அந்த பேனாவைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதைத்தான் இவ்வாறு கூறினேன் என்று ஆசிரியைக்கு புரிய இரண்டு நிமிடம் பிடித்தது.

இவைகள் அனைத்திற்கும் கொஞ்சமும் குறைவில்லாத வாக்கியத்துடன் நிறைவு செய்கிறேன். எவரேனும் தன்னை மிகுந்த எரிச்சலடைய வைத்தாலோ அல்லது தன்னுடைய வேலையின்போது மற்றவர்கள் குறுக்கிட்டு கோபமூட்டினாலோ உணர்ச்சிவயப்பட்டு அதீதமான கோபத்தில் பிரயோகப்படுத்தும் ஆங்கில வாக்கியம்

"You do your work

I do I work!!!!!!!!!!".

ஜம்ஷீது, மொலாங்கோ, அங்கோலா, 15/2/2009.

மீண்டும் சந்திக்கும் வரை . . . . . . . .

காலை 1100 மணி , எனது அறையிலிருந்து பனிக்கு செல்வதற்க்காக பார்ஜினுடைய தளத்திற்கு செல்ல கதவை திறந்தவுடன் பெருத்த மழையையே காண முடிந்தது. எனது மனதில் தோன்றியது.

பவுலின் பிரிவிற்க்காக
மேகமும் கண்ணீர் விட்டு கதருகிறதோ?

26/09/08, நான் பார்ஜிர்க்கு வந்தபோது எனது துறைக்கான அலுவலகத்தில் ஆறுதலுக்குக்கூட ஒரு இந்தியரும் இல்லை. ஆழ் கடல் கட்டுமானம் தொடர்பான பணிகளில் முதல் முறையாக ஈடுபடுவதால் இங்குள்ள தொழில்நுட்பமும் எனக்கு அறிமுகம் இல்லாத நிலை. இப்படியொரு தனிமையான சூழலில் அறிவுரை பெறுவதற்க்கு அறிமுகம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தபோதுதான் பவுல் பார்ஜில் பணிக்கு வந்து சேர்ந்தார். ஐந்தாண்டுகளுக்கு மேலாக எங்களது நிறுவனத்தில் பவுல் பணியாற்றி வருகிறார். அவர் தரக்கட்டுப்பாட்டுத்துரையில் கண்காணிப்பாளர் பதவியில் இருப்பதனால் அவருக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளது. நான் அதே துறையில் ஆய்வாளராக பணியாற்றுவதனால் எனது பணிக்கான அறிவுரைகளும், கட்டளைகளும் அவரிடமிருந்தே பெறப்படும். பவுல் அப்படியொரு பொறுப்பில் இருந்தாலும் எங்களது உறவு ஒரு கண்காணிப்பாளருக்கும் ஆய்வாளருக்கும் உள்ள உறவு போலல்லாமல், உற்ற நண்பர்களாகவே பழகினோம். பார்ஜில் பணி இல்லாத நேரங்களில், அலுவலகத்தில் இருக்கும்போது பகுதி நேரத்திற்க்கும் மேலாக பொதுவான விஷயங்களையே உரையாடிக்கொண்டிருப்போம்.

விரும்பினாலும் விரும்பாவிடினும் அவருக்கு தமிழ் தெரிந்த காரணத்தினால் எனது எழுத்துக்களின் முதல் விமர்சகர் பவுளின்றி வேறெவரும் இல்லை. அவருக்கு தமிழ், பேச மட்டுமே தெரிந்த காரணத்தினால் நான் எனது படைப்புகளைக்கூற அவர் ரசிப்பதுண்டு. அவரது முகபாவங்களை வைத்து அவர் ரசிப்பதாகவே நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவரை மைய்யப்படுத்தி எழுதிய இந்த கட்டுரையை செவி சாய்ப்பதற்கு அவர் நாடு திரும்பியிருக்கக்கூடும். ஆலைக்கட்டுமானம் மற்றும் குழாய் அமைப்புப்பணிகளில் இது போன்ற பிரிவுகள் பொதுவானதே. மீண்டும் வேறு ஏதாவது ஒரு நாட்டிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு திட்டப்பணியிலோ சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் பிரிவுகளை சந்திக்கிறோம்.

ஜம்ஷீது,
காங்கோ,
11/11/08.

Thursday, February 26, 2009

பாழே மடக்கொடி இல்லா மனை

Before, you said
you dont - love me
but now - I wonder
you love me why?

எபி ஒரு திறமையான வெல்டெர். பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்த அவன் பத்தாண்டுகளாக எங்களது நிறுவனத்தில் பணியாற்றுகிறான். நான் இந்த பார்ஜில் பணிக்கு வந்து ஒரு மாதத்திற்க்கு மேல் ஆனாலும், கடந்த இரு வாரங்களாக மட்டுமே வெல்டிங் தொடர்பான வேலைகள் நடந்து வருகிறது. நான் வெல்டிங் கிளையில் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆய்வாளராக பணியாற்றுகின்ற காரணத்தால் வெல்டர்களுடன் நட்புறவு கொள்ள அதிக வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த இரு வாரங்களில் எபியின் சுற்று நான்கு முறை வந்தது. இந்த நான்கு முறையிலும் நானே அவனுடைய வெல்டிங்கை கண்காணிக்கும்படியான சூழல் அமைந்து விட்டது. அவன் ஒரு திறமையான வெல்டர் மட்டுமல்ல சுறுசுறுப்பு மிக்கவனும் கூட. எந்த ஒரு இந்தியரை பார்த்தாலும் "கியா ஹால் ஹே பாய்?" என்று கேட்பது அவனுடைய வழக்கம். ஒரே ஆளை, ஒரே நாளில் நூறு முறை பார்த்தாலும், நூறு முறையும் இதை கேட்பான். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிக்கும் அவன், எந்த நேரமும் பாடிக்கொண்டே இருப்பான். வெல்டிங் நடைபெறும்போது வெல்டர்கள் மற்றும் வெல்டிங் செயர்ப்பாடுகளை அருகிலிருந்து கண்காணிக்க நேரும். அவ்வாறு நான் கண்காணிக்கும்போது அவன் ஒரே ஆங்கில பாடலை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருந்தது எனது கவனத்தை ஈர்த்தது. அதிலும் அந்த பாடலின் மேலே குறிப்பிட்ட நான்கு வரிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக உதிர்க்கப்பட்ட வார்த்தைகளாக எனக்கு தோன்றியது. இந்த பாடல் அவனுடைய திருமண வாழ்க்கையில் அவனுக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தின் பிரதிபலிப்பு என்பதை பின்பு அவனிடமிருந்து நான் தெரிந்துகொண்டேன்.

எல்லோரையும் போல அவனும் மிகவும் அன்யூன்யமான ஓரு மன வாழ்க்கையையே விரும்பியிருக்கின்றான். விரும்பியவாரே மன வாழ்க்கையும் அமைந்திருப்பதாகவே நம்பியிருக்கின்றான். உறவினர்களுக்கு பொருளுதவிகள் செய்வது, அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவுக்கு பணம் கொடுத்து உதவுவது, அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை பெற்றுத்தர உதவுவது என பல உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவன். தன் உறவினர், தனது மனைவியின் உறவினர் என்ற பாகுபாடு இல்லாமலே உதவிகளை செய்திருக்கிறான். இருந்தாலும் இந்த விஷயத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறிது உரசல்கள் இருந்திருக்கிறது. வெறும் பள்ளிப்படிப்பே முடித்திருந்த தன் மனைவியை கல்லூரி இளநிலை முடிக்க உதவியிருக்கிறான். ஒரு அழகான பெண் குழந்தை உள்ள நிலையில் தனக்கு எபியை பிடிக்கவில்லை என்றும், இனிமேலும் தனக்கு அவன் மீது எந்த ஈர்ப்போ காதலோ இருக்கப்போவதில்லை என்று கூறி விவாகரத்து பெற்றுக்கொண்டதை இன்றளவும் அவனால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

இப்போது அவள் ஒரு நல்ல வேலையில் இருக்கிறாள், இருந்தாலும் தன் மகளுக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அவளுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறான். இப்போதும் வாரத்திற்கு இரு முறையாவது அவளிடம் தொலைபேசியில் பேசுகிறான், தன் மகளை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில். இப்போதெல்லாம் அவளை அழைத்து பேசும்போது, அவள் இவனிடம் நீண்ட நேரம் பேச முயற்ச்சிப்பதாகவும், பேச்சினூடாக அவள் இவனது பிரிவை அதீதமாக உணர்வதாகவும், தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக அவள் பேசுவதும் மிகவும் வியப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறது. ஆனால் இவனுக்கு உறவை புதுப்பித்துக்கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், அவ்வாறு முயற்சிக்க வேண்டாம் என்பதை அவளிடம் தெளிவாக கூறியிருக்கிறான்.

எபி தன் தாய் நாட்டிற்கு சென்றாலும் கூட, இவனது நடவடிக்கைகளை தன் உறவினர் யாருக்கும் தெரியப்படுத்துவது இல்லை. யாரையாவது சந்திக்க வேண்டுமென்றாலும் கூட, அவர்களை ஒரு பொது இடத்திற்கு வரவழைத்துப்பேசிவிட்டு அனுப்பிவிடுவது வழக்கமாம். இப்போது அவன் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும், இது அவனுடைய உறவினர்களுக்கு தெரியும் பட்சத்தில், இவனுடைய வாழ்க்கை இவ்வாறு அமைந்துவிட்டதை எண்ணி அவர்கள் வருத்தப்படுவார்கள் என்றும் அதை அவன் விரும்பவில்லை என்றும் கூறுகிறான்.

பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் நினைவிற்க்கு வருகிறது

நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இது தானோ? – எதிர்
பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
பாடம் இது தானோ?

பேசிப் பேசிப் பலநாள் பேசி
நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
ஆசைக் கனியாய் ஆகும் போது
அன்பை இழந்தால் லாபம் ஏது?

ஜம்ஷீது,
பாயிண்ட் நுவா,
காங்கோ,
9/11/08.

எனது முதல் கடல் பயணம்.......

நெடு நாட்களாக எதிர்ப்பார்த்திருந்த இந்தப்பயணம் கனவுப்பயணமாக இருக்கும் என்றெண்ணியிருந்தேன். ஆனால் மிகவும் கலக்கம் வாய்ந்த பயணமாகவே அமைந்தது. முதல் கனவு? நினைவில் இல்லை. முதல் முத்தம்? அது தான் எனது முதல் கனவாக இருக்கலாம். முதல் காதல்? இந்தக்கேள்வியை விட, எனது முதல் காதலியின் முதல் குழந்தைக்கு என்ன வயது ஆகிறது என்ற கேள்வியே மிகவும் பொருத்தமானது. இப்படியாக எந்த முதல்களையும் நான் பதிவு செய்தது இல்லை. அதனாலேயே எனது முதல் கடல் பயணத்தைப்பதிவு செய்கிறேன்.

பாயின்ட் நுவோ (Point noire), இது காங்கோ நாட்டின் துறைமுக நகரம். இங்கிருந்து காபோன் என்ற அருகாமை நாட்டிற்கு module installation (தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை) பணிக்காகச்செல்வதே குறிக்கோள். இங்கே நான் பணியாற்றும் பார்ஜை (Barge) பற்றி சிறிது தெரிந்து கொள்வது அவசியம். பார்ஜ் என்பது ஆழ் கடல் குழாய் அமைக்கும் பணிக்காகப்பயன்படுத்தப்படும் ஒரு மிதக்கும் கனரக தொழிற்கூடம். இது பார்ப்பதற்கு கப்பல் போல் காட்சி அளித்தாலும் இதனைக்கப்பல் என்று கூறிவிட இயலாது. பொதுவாக பார்ஜிற்க்கு முன்தள்ளி அமைப்பு (propulsion unit) இருப்பதில்லை. ஒரு இழுவைப்படகின் (tucking boat) துணையுடனேயே இதனை இயக்க முடியும். நான் பணியாற்றும் இந்த பார்ஜ் சுமார் 450 அடி நீளமும் 110 அடி அகலமும் கொண்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

மாலை சுமார் 0530 மணி, பார்ஜ் நகரத்துவங்கிவிட்டது என்று நண்பர்கள் கூறியே அறிந்து கொண்டேன். பார்ஜினுடைய வேகம் 5 knot (1 knot என்பது மணிக்கு/கி.மீ 1.8) வேகத்திற்கும் குறைவாகவே இருந்தது. இவ்வளவு குறைவான வேகத்திலும் பார்ஜ் ஒரு ஊஞ்சலைப்போல ஆடிக்கொண்டேதான் இருந்தது. நான் மற்றும் நண்பர் பவுல், இருவரும் பார்ஜினுடைய தளத்திற்கு (deck) சென்று சில புகைப்படங்களை எடுத்துக்கொள்ள முற்பட்டபோது பாயின்ட் நுவோ துறைமுகம் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த கப்பல்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மறையத்தொடங்கியது ஒரு புதுமையான வியப்பைக்கொடுத்தது.

பவுல் கடந்த ஐந்து வருடகாலமாக இந்த துறையில் பணியாற்றி வருகிறார். திருச்சூரைச்சார்ந்த அவர் நெய்வேலியில் படித்து வளர்ந்தவர். நன்றாகத்தமிழ் பேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் சிறிது ஆக்ரோஷமாகவே காணப்பட்டது, ஆகையினால் பார்ஜினுடைய ஆட்டமும் அதிகமாக இருந்தது; சிறுது நேரம் பார்ஜினுடைய தளத்தில் கதைத்து கொண்டு, அலுவலக அறைக்கு சென்றுவிட்டோம். அலுவலக அறையில் மற்ற சில நண்பர்களும் அமர்ந்திருந்தார்கள். பார்ஜினுடைய ஆட்டத்தின் காரணமாக எனக்கு தலை சுற்றல் ஏற்பட்டு, அமைதியாக அமர்ந்திருந்தேன். மற்றவர்களுக்கும் அதே நிலை தான் என்றாலும், அதை வெளிக்காட்டாமல் இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்கள்.

எங்களது நிறுவனம் குழாய் அமைப்பது செவ்றோன் என்ற அமெரிக்க எண்னை நிறுவனத்திற்கு. ஆகையினால் குழாய் அமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்கு அந்நிறுவனத்தின் சார்பாக ஒரு 68 வயது ஆய்வாளர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். அவரது அறை எங்களது அறைக்கு அடுத்துள்ளது.

எல்லோரும் அமைதியாக இருந்த சூழ்நிலையில். அந்த அறையிலிருந்து ஒரு கூக்குரல். 'ஃப' வில் தொடங்கி 'க்' கில் முடியும் ஒரு பொதுவான ஆங்கிலச்சொல்லில் ஓலமிட்டுக்கொண்டிருந்தார். எங்களது அறைக்கு வந்து அவருடைய விவாகரத்தான தன் இரண்டாவது மனைவியின் ஒழுக்கத்தைப்பற்றி நாகரிகமான முறையில் நயமான நான்கு ஆங்கிலச்சொற்களை பயன்படுத்தி அவளுடைய பிறப்பை கேவலப்படுத்துவது அவருடைய வழக்கம் .

இம்முறை அவர் எங்களது அறைக்கு வந்தது தான் தாமதம், எல்லோரும் பார்ஜினுடைய ஆட்டத்தினால் அவர்களுக்கு ஏற்பட்ட அங்கலாய்ப்பை அரங்கேற்றம் செய்து கொண்டிருந்தார்கள். நான் மட்டும் இந்த ஆட்டத்தின் நாயகனாக பேசக்கூட திராணியற்று சப்தநாடியும் அடங்கி அமைதியாக வீற்றிருந்தேன். எனது சிந்தனை ஒரு ஆறு ஆண்டுகள் பின்னோக்கி போயிற்று. நான் மற்றும் நண்பர் கிருஷ்ணன், இருவரும் பொறியியல் இளநிலை முடித்த கையோடு கப்பலில் வேலைக்குச்சேரவேண்டும் என்ற எண்ணத்தில் மும்பைக்கு பயணமானோம். ஒரு சரக்கு கப்பல் நிறுவனத்தின் பொது உரையாடல் மற்றும் நேர்காணலுக்காகச்சென்றிருந்தோம். அங்கே பொது உரையாடலின்போது அவர்கள் பேசியது ஊக்கம் அளிப்பதாக இருக்கவில்லை. வீட்டில் ஒரு அமங்கலமான சூழல் ஏற்படும்போது நம்முடைய பங்களிப்பு அங்கே இருக்காது என்று கூறியது எங்கள் மனதில் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியது. மற்றும் நேர்காணலின்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் கோணலாகவே அமைந்தது. முதற் கோணல் முற்றிலும் கோணலாக அமைந்துவிடக்கூடாது என்றெண்ணி கப்பல் வேலை வேலைக்காகாது என்று முடிவெடுத்துவிட்டோம்.

இருந்தாலும் விதி வலிது என்ற கூற்றிற்கு ஏற்றார்போல, கப்பலில் இல்லையென்றாலும் கடலில் வேலை என்றாகிவிட்டது. ஒரு ஆறுதல் என்னவென்றால் பார்ஜ் ஒரு இடத்தில் அல்லது ஒரு நாட்டில் வேலை முடிந்து அடுத்த இடத்திற்கோ அல்லது நாட்டிற்கோ செல்லும்போது மட்டுமே இப்படி ஒரு நெடும் பயணம் மேற்க்கொள்ள நேரும். அப்போதும் கூட உதவிப்படகுகள் புடைசூழ ஒரு மாப்பிள்ளை தோரணையுடனே மிதந்து செல்லும். அவசரகால தேவைக்கு ஹெலிகாப்டர் உதவியும் உண்டு. மற்றபடி பொதுவான ஆழ் கடல் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபடும்போது கடலில் நங்கூரம் (anchoring) பாய்ச்சப்படுவதால் இது போன்ற ஆட்டத்திற்கு வழி இல்லாமல் போய்விடும்.

சுமார் 36 மணி நேர கடல் வழி பயணத்திற்கு பிறகு காபோன் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியை வந்தடைந்தோம். கடலின் தட்ப வெட்ப சூழ்நிலையை அறிந்து அதனுடைய சாதக பாதகங்களையும் ஆராய்ந்த பிறகே எங்களது பணியைத்தொடருவோம். அது வரை வெட்டியாய் பொழுதை கழிப்பதை பற்றி ஆராய்வது, திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் அனிவகுப்பை கண்டு கழிப்பது, படம் பிடிப்பது போன்றவை மட்டுமே பொழுதுபோக்கு.


ஜம்ஷீது,
காபோன்,
28/10/2008.