சம்பவம் தொடங்கியது இவ்வாறுதான்: "Who name?". நான் பார்ஜில் ஆய்வு செய்யும் வெல்டிங்கில் ஏதாவது பிசுறுகள் இருப்பின் அதை களைவதற்கு உதவியாளராக ஒரு இந்தோனேசியர் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தார். அவரை எல்லோரும் "பன்ஜாங்" என்று அழைக்கவும் நானும் அவ்வாறே அவரை அழைத்தேன். ஆனால் பின்பு கூர்ந்து கவனிக்கும்போது அவரும் மற்றவர்களை பன்ஜாங் என்றே அழைத்தார். இறுதியில் அவரிடமே அவருடைய பெயரைக்கேட்டபோது, "சிப்ரி" என்று கூறினார். பன்ஜாங் என்றால் சீன மொழியில் நெட்டை ஆசாமி என்று பொருளாம். சிப்ரி என்பது இந்தோனேசியாவில் இஸ்லாமிய பெயர் என்றும், என்னுடைய பெயரை தெரிந்துகொள்ளும் நோக்கில் கேட்கப்பட்ட கேள்விதான் "Who name?". அவர் என்ன கேட்கிறார் என்று தெரிந்துகொள்ள சிறிது நேரம் எடுத்தாலும் இறுதியில் புரிந்துகொண்டேன்.
இரவு போஜனத்தை இங்குள்ள இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே மேசையில் அமர்ந்துண்பது வழக்கம். அன்று இரவு உணவு வேளையின்போது பகலில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நண்பர்களுடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டேன். அப்போது இங்கு ஒரு நவீன ஆங்கில இலக்கியமுறை கையாளப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்.
பிரான்சிஸ் வல்லியூரைச் சேர்ந்த நண்பர். சென்ற மாதம் பார்ஜில் எலெக்ட்ரீஸியன் பணிக்கு வந்து சேர்ந்தார். இவருடைய இத்தாலிய ஃபோர்மேன் இவரிடம் ஒரு தொலைபேசியைக் கொடுத்து, அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்குமாறு கூறுகிறார். இதில் அந்த ஃபோர்மேன் பிரான்சிஸிடம் மூன்று விஷயங்களை புரியவைக்க வேண்டும். ஒன்று, அத்தொலைபேசியை பொது ஸ்டோரில் அல்லாமல் எலெக்ட்ரிகல் ஸ்டோரில் வைக்க வேண்டும். இரண்டு, எலெக்ட்ரிகல் ஸ்டோரில் அத்தொலைபேசியை வைக்கவேண்டிய குறிப்பிட்ட இடம். மூன்று, அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள அடுக்குகளில் எந்த அடுக்கில் வைக்கவேண்டும் என்பது . பிரான்சிஸிடம் அவர் முதலாவதாகக் கூறியது "No big store, ok". பிரான்சிஸிற்க்கு இதை எலெக்ட்ரிகல் ஸ்டோரில் வைக்கவேண்டும் என்று புரிந்துவிட்டது. பின்பு ஃபோர்மேன் கூறியது "Go electrical store, no right, no right, right". ஒருவாறாக இதுவும் நண்பருக்கு புரிந்துவிட்டது. அதாவது எலெக்ட்ரிகல் ஸ்டோருக்குச் செல்ல வேண்டும், உள்ளே சென்றவுடன் மூன்றாவது வலதில் திரும்பவேண்டும். இறுதியாக ஃபோர்மேன் கூறியதுதான் முற்றிலும் இலக்கண வரம்பிற்கு அப்பாற்பட்டது . " after up more more telephone keep". நண்பருக்கு ஆங்கிலம் தெரியாதபட்சத்தில், ஆங்கிலம் தெரிந்த ஒருவரிடம் இந்த வாக்கியத்தின் விளக்கத்தை கேட்டறியலாம். இப்போது இந்த ஆங்கில வாக்கியத்தை மீண்டும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துதரத்தக்கவல்லவரை இந்த நொடியில் எங்கே பிடிப்பது. நண்பர் விழிப்பதை பார்த்த ஃபோர்மேன், அவரே அந்த வாக்கியத்தின் பொருளைப் புரியவைக்கலானார். ஒருவழியாக ஃபோர்மேன் கூறவந்ததை பிரான்சிஸ் இறுதியில் புரிந்துகொண்டார். அதாவது, எலெக்ட்ரிகல் ஸ்டோரின் குறிப்பிட்ட இடத்தில், மேல் அடுக்கில் நிறைய தொலைபேசிகள் இருக்கும், அதோடு இதையும் வைக்க வேண்டும்.
ஸ்டோரில் நடக்கும் மற்ற கதைகளைப் பார்ப்போம். பொது ஸ்டோரில் முதல் வலதில் திரும்பி மீண்டும் மூன்றாவது இடதில் திரும்பி நேராக செல்வதற்கு கொடுக்கும் வழிமுறை. " Go right. no left, no left, left. After gogo gogogooooooo gogo" . உலோகத் துண்டுகளை குறிப்பிடட்ட வடிவில் வெட்டிய பிறகு அதனை இறுதி வடிவம் கொடுப்பதற்கு ஃபைல் (file) செய்வது வழக்கம். நகவெட்டியால் நகத்தை வெட்டிய பிறகு அதன் பின் பகுதியை வைத்து நகத்தை வடிவாக்குவதைப்போல. தனக்கு சரியாக ஃபைல் செய்யத்தெரியவில்லை என்று ஸ்டோர் கீப்பர் ஒரு இந்தோநேசியரிடம் கூறவும் அதை ஃபைல் செய்வது எப்படி என்று இந்தோனேசியர் இவருக்கு ஆங்கிலத்தில் புரியவைக்கிறார் (வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி இல்லாமல் அதிவேகமாக வாசிக்கவும்) No..........FileFileFileFileFileFile (அடுத்து வரும் வாக்கியத்தை வார்த்தைக்கு வார்த்தை குறைந்த பட்சம் இரண்டு நொடி இடைவெளி விட்டு வாசிக்கவும்) File (ஃபைஈஈஈஈஈல்) ....... File...... File....... File....... ஆங்கிலம் தான் எத்தனை சுலபமானது.
கடலில் நீருக்கு அடியில் ஏதாவது பனி இருப்பின் பொது ஒலிபெருக்கியில் Divers ready என்று அழைப்பார்கள். இதைக்கேட்ட ஒருவர் நண்பர் அருணிடம் "Have swimming?" என்று கேட்கவும், அருணுக்கு விழி பிதுங்கிவிட்டது. அதாவது உனக்கு நீச்சல் தெரியுமா என்று வினவியிருக்கிறார்.
பிரான்ஸிசும் அவருடைய சக எலெக்ட்ரீஸியனும் ஒரு ஒயரிங் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது பிரான்ஸிசிடம் அந்த இரண்டாமவர் திடீரென்று "செக் ஸுப்லே" என்று கூறவும் நண்பர் பிரான்ஸிசும் எதையோ தேடச் சொல்கிறார் என்று புரிந்தவராக காலுக்கு அடியில் துளாவத் துவங்கியிருக்கிறார். இதைக்கண்ட அந்த இரண்டாமவர் "Have tester?" என்று கேட்கவுமே, நண்பருக்குப் புரிந்தது அவர் கூற முற்ப்பட்டது "Check supply". பிரான்சிஸிடம் ஒரு வெல்டிங் இயந்திரம் பழுதாகிவிட்டதாகக் கூறி அதை சரிப்படுத்த வருமாறு அழைப்பு வருகிறது. அதைக்கேட்ட அவருடைய ஃபோர்மேன் பிரான்சிஸிடம் கூறியது "No go. You no, I no." இருவருக்குமே அதனைப்பற்றிய தொழில்நுட்பம் தெரியாது என்று கூற முயற்சித்திருக்கிறார்.
நானும் ஒன்றும் சளைத்தவனல்ல. என்னுடைய மூன்றாம் வகுப்பில் ஒரு பேனா காணாமல் போய்விட்டதாகவும் அதை யாரேனும் பார்த்தீர்களா என்று வகுப்பாசிரியை பதர்நிசா மாணவர்களிடம் கேட்க நானும் எழுந்து நின்று கூறியது "I no miss". "My name is Jamsheed Salahudeen" என்ற வாக்கியத்திற்கு பிறகு இதுதான் நான் பேசிய முதல் ஆங்கில வாக்கியம். தொலைந்த அந்த பேனாவைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதைத்தான் இவ்வாறு கூறினேன் என்று ஆசிரியைக்கு புரிய இரண்டு நிமிடம் பிடித்தது.
இவைகள் அனைத்திற்கும் கொஞ்சமும் குறைவில்லாத வாக்கியத்துடன் நிறைவு செய்கிறேன். எவரேனும் தன்னை மிகுந்த எரிச்சலடைய வைத்தாலோ அல்லது தன்னுடைய வேலையின்போது மற்றவர்கள் குறுக்கிட்டு கோபமூட்டினாலோ உணர்ச்சிவயப்பட்டு அதீதமான கோபத்தில் பிரயோகப்படுத்தும் ஆங்கில வாக்கியம்
"You do your work
I do I work!!!!!!!!!!".
ஜம்ஷீது, மொலாங்கோ, அங்கோலா, 15/2/2009.

சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு..
ReplyDelete